#கொரோனா: யாருக்கெல்லாம் 3 மாதத்துக்கு பிறகு தடுப்பூசி… மத்திய அரசு அறிவிப்பு விபரம்:-

Read Time:3 Minute, 42 Second

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கான கால வரையறை குறித்து அவர்களிடையே குழப்பமான சூழல் நிலவியது. இவ்விவகாரம் குறித்து கொரோனா தடுப்பூசி குறித்தான தேசிய நிபுணர் குழு மத்திய அரசுக்கு புதிய பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

3 மாதங்களுக்கு தள்ளிவைப்பு

அதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தனிநபர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 3 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
  • கொரோனா தொற்று சிகிச்சையின் போது நோய் எதிரணுக்கள் (மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்) அல்லது பிளாஸ்மா தானம் பெற்றுக் கொண்டவர்களும் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
  • தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களும் குணமடைந்து 3 மாதங்களுக்கு பிறகே 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • கொரோனாவை தவிர வேறு ஏதாவது தீவிரமான நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோ அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தோ குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 முதல் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
  • பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் விவகாரம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த தானம் செய்யலாமா?

  • கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் 14 நாட்களுக்கு பின்னர் ரத்த தானம் செய்யலாம் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தொற்றுக்கு ஆளானவரும் குணமடைந்த 14 நாட்களுக்கு பின்னர் ரத்த தானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் எழுந்துள்ள சூழல் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.