‘வெறும் பொம்மைகள்’.. மம்தா VS மத்திய அரசு மோதல் நடந்தது என்ன…?

Read Time:4 Minute, 16 Second

கொரோனா தொற்று விவகாரம் குறித்து பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை பேச விடவில்லை என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களே அனுதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வெறும் பொம்மைகள்’ மம்தா பேட்டி

கொரோனா வைரஸ் தொற்று விவகாரம் குறித்து பிரதமர் மோடி 19-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தான் தங்களை பேசவிடவில்லை என்பது மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டாகும்.

கொல்கத்தாவில் இருக்கும் மேற்கு வங்க தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் தானும், இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் பேச அனுமதிக்கப்படவில்லை என்றார்.

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என்றும் மற்றவர்கள் வெறும் பொம்மைகள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தோம் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும் இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் முயற்சி என குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, நாங்கள் சொல்வதை கேட்க இயலாத அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் பிரதமர் இருக்கிறார் என்றும் மொத்தத்தில், இந்த கூட்டம் சூப்பர் தோல்வியாக முடிந்து விட்டது என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேற்கு வங்காளத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் கருப்பு பூஞ்சை பற்றி ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி பேசவில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார். கொரோனாவை ஒடுக்க மத்திய அரசிடம் உரிய திட்டம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார் மம்தா பானர்ஜி.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள், ரெயில்வே, விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநிலத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

அதிகாரிகள் மறுப்பு

ஆனால் மம்தா பானர்ஜியின் குற்றச்சாடை மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர்களுடனும், கள அதிகாரிகளுடனும் விவாதிக்கவே நடத்தப்பட்டது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட மாநில அதிகாரிகள் பணியாற்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், கேரளா, சத்தீஷ்கார், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆட்சியர்கள் பேசினர் என்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட ஆட்சியாளரை மம்தா பானர்ஜி பேச விடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.