119 பேருக்கு தொற்று, எந்த வசதியும் இல்லாத சூழலிலும் கொரோனாவை ஒழித்துக்கட்டிய கிராமம்…!

Read Time:3 Minute, 37 Second

கொரோனா தொற்று பரவலை ஒழித்துக்கட்டி ஒரு கிராமம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் கோரத்தாண்டம் ஆடும் நிலையில், பல கிராமங்கள் தொற்றை எப்படி விரட்டலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றன.

அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் போசி கிராமமும் இடம்பெற்றுள்ளது.

கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இதனையத்து சில நாட்களில் சுமார் 6,000 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் 5 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். உடனடியாக கிராம பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து அங்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள 119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

விவசாய நிலங்களில் தனிமை

இதையடுத்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் சங்கிலியை உடைக்கவும் கிராமத்தில் நோயாளிகளை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கிராமத்தில் பெரும்பாலானோருக்கு தனிமைப்படுத்தி கொள்ள வீடுகளில் போதிய வசதி இல்லை. மேலும் அவர்களை மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்த போதிய படுக்கைகளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை விவசாய நிலங்களில் தனிமை படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. சுகாதார அதிகாரிகள் அனுமதி கொடுததை அடுத்து நிலமற்றவர்களுக்கு தங்க தற்காலிக கூடாரங்கள் அமைகப்பட்டது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டி இருந்தவர்கள் இருந்த இடங்களுக்கு கிராம சுகாதார ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தினமும் சந்தித்து உடல்நலத்தை கேட்டறிந்து, அங்கேயே அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்கினர். இதற்கு கிராம மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு 15 முதல் 20 நாட்கள் பின்னர் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்த தற்காப்பு மற்றும் சங்கிலி உடைப்பு நடவடிக்கைகளால் நடவடிக்கைகளின் காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இந்த கிராமம் புதிய கொரோனா நோயாளிகள் இல்லாத கிராமமாக மாறியிருக்கிறது.

போதிய சுகாதார வசதிகள் இல்லாத கிராமங்களில் கூட, தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோயில் இருந்து விடுபட முடியும் என்பதற்கு இந்த கிராமம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பது பாராட்டத்தக்கது.