அமைச்சர் ராஜினாமா… சொந்த தொகுதிக்கே திரும்புகிறாரா மம்தா…?

Read Time:3 Minute, 49 Second

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியான பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரையில் நடந்தவை….

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சொந்த தொகுதி பவானிப்பூர் தொகுதியாகும். 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றே முதல்வர் ஆனார். ஆனால் சமீபத்தில் நடந்த 2021 மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் அவர், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜக அணிக்கு தாவிய சுவேந்து அதிகாரியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தலில் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராமில் களமிறங்கிய மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தபோதும், மம்தா தோல்வியை தழுவியது அதிர்வலையை ஏற்படுத்தியது.

முதல்வராக பதவியேற்றார்-மந்திரியானார்

தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினாலும் மேற்கு வங்காளத்தின் முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்று உள்ளார். இருப்பினும் அரசியலமைப்புபடி அவர் இன்னும் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

வேளாண் அமைச்சர் ராஜினாமா

இந்த தேர்தலில் மம்தாவின் பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொபந்தேப் சட்டோபாத்யாய் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

புதிய ஆட்சியில் அவருக்கு வேளாண்துறையை மம்தா பானர்ஜி வழங்கினார்.

சொபந்தேப் சட்டோபாத்யாய்.

இந்நிலையில் சொபந்தேப் சட்டோபாத்யாய் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது ராஜினாமாவை சபாநாயகர் பிமன் பானர்ஜியும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து பேசிய அவர், இது தனது முடிவும், கட்சியின் முடிவும் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகிழ்ச்சியுடனே தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் சொபந்தேப் சட்டோபாத்யாய் தெரிவித்து உள்ளார்..

பவானிப்பூரில் போட்டி

பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்து இருப்பதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் அங்கு மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மம்தா போட்டியிடவே சொபந்தேப் சட்டோபாத்யாய் ராஜினாமா செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மம்தா பானர்ஜி மீண்டும் தனது சொந்த தொகுதிக்கு திரும்புவது உறுதியாகிறது….