பவானிசாகர் பகுதியில் மின்சாரம் பாய்ச்சி ஆண் யானை கொலை…

Read Time:3 Minute, 57 Second

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.

பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது காராச்சிகொரை கிராமம்.

இந்த கிராமத்தில் விவசாயிகள் அதிகமாக வாழை பயிரிட்டு உள்ளனர். சில விவசாயிகள் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து உள்ளனர். இந்த வேலியில் பேட்டரி மின்சாரம் பாய்ச்சிக்கொள்ள வனத்துறை தர்பபில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் சிலர் வேலியில் நேரடியாக உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சுகிறார்கள்.

இதனால் தோட்டத்துக்கு பயிர்களை தேடிவரும் யானை உள்ளிட்ட விலங்குகள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபகரமான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற சம்பவம் காராச்சிகொரை கிராமத்தில் நடந்திருக்கிறது. கிராமத்தை சேர்ந்த ராஜன் என்ற விவசாயி, தன்னுடைய வாழை தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து, உயரழுத்த மின்சாரத்தை பாய்ச்சி இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் மே 25-ம் தேதி நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று ராஜனின் வாழைத் தோட்டத்திற்கு வந்துள்ளது. தோட்டத்துக்குள் புகுந்து யானை வாழைகளை சேதப்படுத்தியது. பிறகு தோட்டத்தை விட்டு வெளியே வரும்போது மின்சார வேலியில் சிக்கி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து இருக்கிறது.

உயிரிழந்த யானை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

மின்வேலி அமைத்திருந்த விவசாயி ராஜன் தலைமறைவாகி உள்ளார். அவர் வீட்டிற்கு கொடுத்த மின் இணைப்பில் இருந்து வேலியில் மின்சாரத்தை பாய்ச்சியிருக்கிறார்.

இதற்கிடையே யானைகள் வெளியேறாமல் இருக்க குறிப்பிட்ட இடங்களில் அகழி வெட்டுங்கள் என்று பலமுறை வனத்துறையிடம் கோரிக்கை வைத்துவிட்டோம் என்றும் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில், யானைகள் விரும்பி உண்ணக்கூடிய கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிட வேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மேலும் மின்வேலியில் விதிகளுக்கு மாறாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சக்கூடாது என்றும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது எனக் குற்றம் சாட்டும் வன விலங்குகள் ஆர்வலர்கள், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகம் மின்வேலி அமைப்பு தரவுகளை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 2 யானைகள் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டு உள்ளது.

கடந்த 21-ம் தேதி டி.என். பாளையம் வனச்சரக பகுதியில் 35 வயது ஆண் யானை வயலில் வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.