கொரோனாவை எதிர்த்து போராடி வென்ற 107 வயது மூதாட்டி…!

Read Time:2 Minute, 31 Second

இந்தியாவில் தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மக்கள் கொத்துக்கொத்தாக பலியாகி வருகிறார்கள். கர்நாடகாவில் கொரோனாவுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும் அரங்கேறி வருகிறது. கொரோனாவை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடித்தால் மீண்டுவிடலாம் என மருத்துவர்கள் கூறுவருகிறார்கள். அந்தவகையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி 107 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளார். அவர் போராடி வென்று காட்டியிருப்பது மற்றவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பெங்களூரு சேஷாத்திரிபுரத்தை சேர்ந்தவர் காலம்மா. 107 வயதாகும் இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது மகன் வேலை செய்யும் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலம்மா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து காலம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் அடைந்ததால் மகனிடம் பேசிய காலம்மா, நல்லபடியாக இருக்கிறேன் , தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து காலம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்..

107 வயதில் கொரோனாவில் இருந்து போராடி மீண்ட காலம்மா பாட்டி எல்லோருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார் என்றால் ஐயமில்லை..