வாட்ஸ் அப் விவகாரம், மத்திய அரசின் விளக்கம் ஒரு பார்வை…

Read Time:8 Minute, 1 Second

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வரப்பட்டது..

அப்போது இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ம் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது என்றும் ஏதேனும் புகார் வரும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனறும் விதிகளில் கூறப்பட்டு இருக்கிறது.

இதற்கு கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்து உள்ளன. அந்நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடர்கின்றன. ஆனால் வாட்ஸ்-அப் நிறுவனம் மத்திய அரசின் சட்டவிதிகள், தனி உரிமையை பாதிக்கும் எனக் கருதுகிறது. எனவே மத்திய அரசின் இந்த சட்ட விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு

வாட்ஸ்-அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், புதிய விதிகளின்படி வாட்ஸ்-அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கோரப்பட்டு உள்ளது. இந்த விதிமுறை வாட்ஸ்-அப் நிறுவனத்தின் தனிநபர் தரவு பாதுகாப்புக்கு எதிரானது எனக் கூறியிருக்கிறது.

மேலும் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் தனிநபர் பகிர்ந்துக் கொண்ட அந்தரங்க விவரங்கள், தரவுகளை விசாரணை அமைப்புகளின் தேவைக்காக தனியார் நிறுவனங்கள் சேகரித்து வைக்க நேரிடும் என்றும் ஒருவர் உருவாக்காத செய்தியை பகிரும் போது அவர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்றும் இது தவறிழைக்காதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்த நடவடிக்கையானது சர்வதேச அளவிலான கருத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்டவற்றுக்கு எதிரானது எனக் கூறியிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம், இந்த விதிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது என அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறையை அமல்படுத்த மே 25-ம் கடைசி தேதி என்ற நிலையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவதை தடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசு சொல்வது என்ன…?

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனி உரிமைக்கு எதிரானவை அல்ல என மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிலை வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாட்ஸ்-அப் நிறுவனம் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியிருக்கிறது.

  • வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருப்பது விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கான முயற்சி ஆகும்.
  • இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் சமூக ஊடக நிறுவனங்கள் சட்டரீதியான குறுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
  • இந்தியா கேட்பது மற்ற நாடுகள் கேட்பதில் இருந்து எவ்வளவோ குறைவானது.
  • புதிய இடைநிலை வழிகாட்டுதல் விதிமுறைகள் தனி உரிமைக்கு மாறானவை என சித்தரிக்கும் வாட்ஸ்-அப் நிறுவன முயற்சி தவறாக வழிநடத்தப்படுவதாக உள்ளது.
  • தனி உரிமையை மத்திய அரசு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கிறது.
  • தனி உரிமையை தனது குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் உறுதியாகவும் இருக்கிறது.
  • அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளது.
  • ஒரு குறிப்பிட்ட செய்தியின் தோற்றத்தை வாட்ஸ்-அப் வெளிப்படுத்த தேவைப்படும்போது, அந்த தனி உரிமைக்கான உரிமையை மீறும் நோக்கம் இல்லை…
  • இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் இணக்கமான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது மேலே குறிப்பிட்டுள்ளவற்றுடன் தொடர்புடைய குற்றங்களை தூண்டுதல்
  • பலாத்காரம், ஆபாசம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கும், விசாரிப்பதற்கும் அல்லது தண்டிப்பதற்கும், ஒரு செய்தி பற்றிய தகவல்கள் அவசியமானால் தான் தேவைப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதே புதிய விதிகளின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், விமர்சனத்தையும், கேள்வி கேட்கும் உரிமையையும் மத்திய அரசு வரவேற்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தனி உரிமையை முழுமையாக அங்கீகரிக்கிறது எனக் கூறியிருக்கும் அவர், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவே செய்கிறது என தெரிவித்து உள்ளார்..

வாட்ஸ்-அப்’ பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை என்றும் சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு வழிவகுக்கும் செய்தியை முதலில் வெளியிட்டவர் யார் என்று கண்டுபிடிப்பதே இதன் நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்தியாவில் வசிக்கக்கூடிய குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர்களிடம் பயனாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து இருக்கிறார்.