கொரோனாவை குணப்படுத்த நாட்டு வைத்தியர் தயாரித்த மருந்துக்கு அனுமதி!

Read Time:4 Minute, 44 Second

ஆந்திராவில் நாட்டு வைத்தியர் தயாரித்த கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதியை வழங்கியிருக்கிறது. ஆனால், கண்களில் ஊற்றப்பட்டு வந்த சொட்டு மருந்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

நாட்டு வைத்தியர் தயாரித்த மருந்து

இந்தியாவில் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டம் ஆடியிருக்கிறது. தொற்று பாதிப்பு குறைந்து இருந்தாலும் உயிரிழப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பக்கட்ட நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு சித்த மருந்துவம் உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படி கபசுர குடிநீரை தயாரிக்கலாம், நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன உணவுகளை எடுக்கலாம் என அரசுக்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்ற நாட்டு வைத்தியர் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருந்தை தயாரித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வரும் அவர், கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்க பிரத்யேக மருந்தை தயாரித்து உள்ளார். இது நல்ல பலன் தருவதாக கூறப்பட்டதும், அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிந்தனர்.

இதனால் நீண்ட தொலைவு மக்கள் வரிசையாக நின்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மக்கள் நெருக்கடியாக கிலோ மீட்டர் தொலைவில் காத்து கிடந்தனர். வாய்வழியாக உண்ணும் லேகியம் மற்றும் கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தினை உருவாக்கியிருக்கிறார் ஆனந்தய்யா.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்று நோயாளிகளை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) குழுவை கேட்டுக்கொண்டார்.

தீங்கு விளைவிக்காது

ஆய்வு முடியும் வரையில் ஆனந்தய்யாவின் மருந்தை விற்பனை செய்வதை நிறுத்துமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழுவினரும், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகளும் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தனர். இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் ஆந்திர மாநில மருத்துவ குழு அறிவித்தது.

மேலும் ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத வல்லுநர்களும் இந்த தயாரிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகமும், திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத வல்லுநர்கள் குழுவும் மருந்தினால் தீங்கு நேரிட எந்தஒரு முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருந்தை விற்பனை செய்வதற்கு ஆந்திர மாநில அரசு அனுமதியை வழங்கியிருக்கிறது.. ஆனால், கண்களில் ஊற்றப்பட்டு வந்த சொட்டு மருந்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

இதற்கிடையே கள்ளச்சந்தையில் விற்பனை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கள்ளச்சந்தையில் விற்பனை மற்றும் போலி மருந்துகள் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது.