3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. ஆர்வம் காட்டாத சீன பெண்கள்..!

Read Time:4 Minute, 49 Second

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்ததால் சீன தம்பதிகளின் இனி 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்து இருந்தாலும், அந்நாட்டு பெண்களிடம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வம் இல்லை என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

மக்கள் தொகையில் முதல் நாடு

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவாகும். சீனாவில் 144 கோடி மக்கள் உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 18.47 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கம்யூனிச அரசு கடந்த 1980-ம் ஆண்டு ‘ஒரே குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைபடுத்தியது. அப்போது ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மீறி பெற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஒரே குழந்தை கொள்கையால் அங்கு பிறப்பு விகிதம் பெரும் சரிவினை கண்டது.

இதனால் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து பொருளாதா எஞ்ஜினாக இருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவது அபாயம் என என நிபுணர்கள் எச்சரித்ததால் கடந்த 2016-ம் ஆண்டு ஒரே குழந்தை கொள்கையை சீனா ரத்து செய்தது.

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சரிவு

பின்னர் சீன அரசு 2 குழந்தைகள் கொள்கையை நடைமுறைக்கு வந்தது. தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதியை வழங்கியது. இருப்பினும் பல பெண்கள் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. சீனாவில் குழந்தை வளர்ப்புக்கு அதிக செலவாகும் என்பதால் பொருளாதார சூழ்நிலை கருதி பல தம்பதிகள் 2-வது குழந்தையை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் தற்போதைய சீன பெண்கள் மத்தியில் தங்களால் குழந்தைகளை பெற்றுக் கொண்டு கவனிக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. இந்த நிலையில் சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் சரிந்திருப்பதாக தெரிய வந்திருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறடு.

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி

15 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் சீனாவில் சில ஆண்டுகளில் கடினமான வேலைகளை செய்ய இளைஞர்கள் இல்லாத சூழல் ஏற்படும் என்ற எச்சரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை சீர்குலைக்கும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

இவற்றை கருத்தில் கொண்டு சீன அரசு 2 குழந்தைகள் கொள்கையை பரிசீலனை செய்திருக்கிறது. அதனை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் இனி சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தின் போது இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆனால் ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ள விருப்பமில்லாத அளவுக்கு மக்கள் குறைந்த வருமானம் கொண்டுள்ள நிலையில், மூன்று குழந்தைகள் பெற்றெடுக்க திட்டமா என மக்கள் எதிர்வினை தெரிவித்து உள்ளனர்.

மேலும் பெண்கள் மகப்பேறு விடுமுறை எடுப்பதிலும், ஆண்கள் மனைவி மற்றும் குழந்தைக்காக விடுப்பு எடுப்பதிலும் உள்ள “பணியிடம் சார்ந்த சங்கடங்கள்” குறித்து பலரும் தங்களது கவலையை பகிர்ந்து வருகிறார்கள்.