இந்திய கடற்படைக்கு ரூ.43 ஆயிரம் கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கி கப்பல்கள்

Read Time:1 Minute, 55 Second

இந்திய கடற்படைக்கு ரூ.43 ஆயிரம் கோடியில் புதிதாக 6 நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான பிரமாண்ட திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் முப்படைகளையும் நவீனமயமாக்குவதிலும், புதிய தளவாடங்களை படைகளுக்கு சேர்ப்பதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு பாதுகாப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்திய கடற்படைக்கு ரூ.43 ஆயிரம் கோடியில் புதிதாக 6 நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான பிரமாண்ட திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டி.ஏ.சி. என்னும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்கு மரபுரீதியிலான 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

கடற்படை வலுப்படுத்தவும், சீன கடற்படையின் வலிமைக்கும், நமது கடற்படையின் வலிமைக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்குவதற்கு இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பி-75 இந்தியா’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த திட்டத்துக்கான முன்மொழிவு கோரிக்கை (ஆர்.எப்.பி) விரைவில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.