வெப்ப பகுதியில் ஆப்பிளை விளைய வைத்து சாதித்த விவசாயி…!

Read Time:2 Minute, 12 Second

காஷ்மீர், சிம்லா போன்ற மலை, பனிப்பிரதேசங்களில் ஆப்பிள் பழம் விளைச்சல் நடந்து வருகிறது.

மராட்டிய மாநிலம் நாசிக்கில் விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் ஆப்பிளை விளைய வைத்து சாதனை படைத்து உள்ளார். நாசிக்கில் திராட்சை, மாதுளை விளைச்சல் அதிகளவில் இருக்கும்..

நாசிக் மாவட்டத்திலிருந்து வேளாண் பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சாதனா , பாக்லான் தாலுகாக்கள் ஏற்றுமதி தரமான திராட்சை மற்றும் மாதுளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றவையாகும். ஆனால் மாதுளை மீதான நோய் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் பிரமை மற்றும் வெங்காய பயிர்களை தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சாதனா தாலுகா, அகாத்வாடே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஹயாலிஜ், விவசாயத்தில் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்பி அதற்கான முயற்சியையும் மேற்கொண்டு உள்ளார். அவர் சோதனை முயற்சியாக தனது தோட்டத்தில் கால் ஏக்கர் நிலத்தில் 25 முதல் 30 ஆப்பிள் மரக்கன்றை நட்டு பராமரித்து உள்ளார். தற்போது அந்த மரங்கள் வளர்ந்து ஆப்பிள் பழங்கள் விளைய தொடங்கி உள்ளன.

இது குறித்து ஹயாலிஜ் பேசுகையில், எனக்கு மாதுளை மற்றும் திராட்சை தோட்டம் உள்ளது. ஆனால் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்பினேன். எனவே தான் ஆப்பிள் விவசாயத்தை தேர்வு செய்தேன். எனக்கு கிடைத்த வெற்றியில் திருப்தி அடைந்து உள்ளேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து நாசிக் மாவட்டத்தில் விவசாயிகள் பலரும் ஆப்பிளை உற்பத்தி செய்வது குறித்து யோசித்து வருகின்றனர்.