அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்…! ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முக்கிய இடம்…

Read Time:3 Minute, 15 Second

சுவீடனின் ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) உலக நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளது.

‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்து உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. அமெரிக்கா
  2. ரஷியா
  3. இங்கிலாந்து
  4. பிரான்ஸ்
  5. சீனா
  6. இந்தியா
  7. பாகிஸ்தான்
  8. இஸ்ரேல்
  9. வட கொரியா

ஆகிய நாடுகளில் தான் அணு ஆயுதம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9 நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 என கூறப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆயிரத்து 80 அணு ஆயுதங்களில் 2,000 அணுகுண்டுகள், அதிக செயல்பாட்டு எச்சரிக்கையை கொண்டிருக்கின்றன.

ரஷியா முதல் இடம்

ரஷியாவிடம் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா 5,800 ஆயுதங்கள் உள்ளது.

இங்கிலாந்திடம் 225, பிரான்சிடம் 290, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்

கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160, இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்தன எனக் கூறப்பட்டு உள்ளது.

சீனாவைப் பொறுத்தமட்டில் அது அணு ஆயுதங்களின் குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள குவிப்பின் நடுவில் உள்ளது என்றும் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத இருப்பை விஸ்தரித்து வருகிறது என்றும் தெரிகிறது என எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுத இறக்குமதி நாடுகள்

சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா 2016-20 ஆண்டுகள் இடையே அதிகளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்து உள்ளன. சவூதி அரேபியா உலகளவிலான ஆயுத இறக்குமதியில் 11 சதவீதத்தையும், இந்தியா 9.5 சதவீதத்தையும் இந்த கால கட்டத்தில் செய்து உள்ளன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பிரிக்கப்பட்ட புளூட்டோனியம் ஆகியவற்றையே தங்கள் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்துகின்றன.