இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ், டெல்டா பிளசாக உருமாறியது.. எத்தனை நாடுகள் பாதிப்பு..?

Read Time:3 Minute, 9 Second

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான டெல்டா வைரஸ் மீண்டும் டெல்டா பிளசாக உருமாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் இடம் மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து மக்களை தாக்கி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறியது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் பி.1.617.1. இந்த வைரசுக்கு காப்பா என பெயரிடப்பட்டது. இரண்டாவது பி.1.617.2 என்ற உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் ஆவேசத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டெல்டா வைரசும் உருமாறி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த உருமாறிய டெல்டா வைரஸ் ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா பேசுகையில், மாற்றம் மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் கூறுகிறார்.

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் கனடா, ஜெர்மனி, ரஷ்யா, நேபாளம், சுவிட்சர்லாந்து, இந்தியா, போலந்து, போர்ச்சுக்கல், ஜப்பானில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்,

இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

கவலைதரக்கூடியது அல்ல

டெல்டா பிளஸ் வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் காணப்படுகிறது எனக் கூறியிருக்கும் மத்திய அரசு, இந்த வைரஸ் இன்னும் கவலைதரக்கூடிய ஒன்றாக இல்லை என தெரிவித்து உள்ளது. இந்த வைரஸ் பற்றி இன்னும் நாம் நிறைய அறிந்து அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டியதிருக்கிறது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.