கொரோனா ஊரடங்கில் சோலைவனமாக மாறிய அரசுப் பள்ளி..!

Read Time:3 Minute, 51 Second

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராமனூத்து கிராமத்தில் அனைவரையும் தனது பசுமையான சூழலால் கவர்ந்து ஈர்க்கும் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்ராஹிம், இவரோடு மாணவ-மாணவிகள் கை கோர்த்து பள்ளியில் சோலைவனத்தை உருவாக்கி தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் செய்திடாத பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.

தற்போதைய சுற்றுசூழல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு மரம் வளர்ப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தி தற்போது இந்த நிலையை எட்ட செய்து இருக்கிறார், இப்ராஹிம்.

பள்ளி வளாகத்தில் வாழை மரம், அரச மரம், புங்கை மரம், வேப்ப மரம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. மேலும் துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை உள்ளிட்ட மூலிகை செடிகளும் அழகாக வளர்ந்து இருக்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் கண்ணைக்கவரும் வகையில் பசுமைமயமாகவும், குளுமையாகவும் காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் இப்ராஹிமிடம் கேட்டபோது:-

நான் பள்ளியில் பணிபுரிய ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிறது. தலைமை ஆசிரியராகவும் இருப்பதால், புவி வெப்பமயமாதல் பிரச்சினையை தடுக்கும் பொறுப்பு எனக்கும் இருப்பதாக உணர்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே என்னிடம் இருக்கிறது.

ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்காமல் அனாதையாக்குவதை விட, ஒரு மரக்கன்று என்றாலும், பராமரித்து வளர்க்க வேண்டும் என நினைப்பேன்.

இதுபோன்ற சமூக செயல்பாடுகளில் என் மாணவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தேன். சமூக செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் படிப்புடன் பண்புள்ள மனிதர்களாகவும் உயர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்களுக்கு பொறுப்பு

ஒரு மரத்தை பராமரிக்கும் பொறுப்பை ஒவ்வொரு 2-3 மாணவருக்கு கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தை போல் நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தை தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.

பள்ளி வளாகம் சோலைவனமாக மாறியதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது பல மாணவர்கள் தங்களது வீடுகளிலும் மரங்களை ஆர்வமுடன் வளர்க்கிறார்கள். ஒரு நல்ல செயலை ஆரம்பித்து வைத்தால், மாணவர்களே அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

பொதுமக்கள் பாராட்டு

அற்புதமான அரசுப் பள்ளியை உருவாக்கும் இப்ராஹிம் போன்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை என பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் சமையல் கலை பயில்வது, வீடுகளில் தோட்டம் அமைப்பது என்று பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளி ஒன்று சோலைவனமாக மாறி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.