புதிய எண்ணெய் வயலால் 130,000 யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல்…!

Read Time:8 Minute, 45 Second

ஆப்பிரிக்க கண்டத்தில் அங்கோலா, நமீபியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய ஆறு நாடுகளில் காவாங்கோ பள்ளத்தாக்கு பரவி கிடக்கிறது.

அங்கோலா மலைப்பகுதியில் உருவாகும் ஒக்கவாங்கோ ஆறு, தனது துணை ஆறுகளுடன் பல கிளைகளாக ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பயணிக்கிறது. காவாங்கோ பள்ளத்தாக்கு பகுதியில் செல்லும் இடமெல்லாம் வளம் கொழிக்கச் செய்கிறது. ஆறுகளால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும் மீன்பிடி, விவசாயம் செழிக்கிறது.

ஒக்கவாங்கோ ஆறு மற்ற ஆறுகளை போன்று கடலில் கலக்காத ஆறு. இந்த ஆறு போட்ஸ்வானா நாட்டில் உள்ள கலகாரிப் பாலைவனப் பகுதியில் சென்று ஒரு சதுப்பு நிலமாக மாறுகிறது.

இந்த ஆற்றுப்படுகையில் காட்டு எருதுகள், குதிரைகள், ஆப்பிரிக்க யானைகள், ஒட்டக சிவிங்கிகள், மான்கள் என எண்ணற்ற விலங்குகள் வாழ்கின்றன. ஒக்கவாங்கோ ஆற்றிலும், கழிமுகத்திலும் யானைகள் போடும் ஆட்டம் உலக சுற்றுலாக்காரர்களை தன்னுள் இழுக்கிறது.

இப்போது இந்த உயிரினங்களுக்கு ஆபத்தாக எண்ணெய் வயல் உருவாகியிருக்கிறது.

பள்ளத்தாக்கு பகுதியில் பெரும் பகுதியை கொண்டிருக்கும் நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நமீபியாவில் யானைகள் வாழ்விடம் மற்றும் வழித்தடமாக இருக்கும் பகுதியில்தான் எண்ணெய் வயல் திட்டத்திற்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் மில்லியன் கணக்கில் இருந்த யானைகளின் எண்ணிக்கை இப்போது 450,000-க்கும் கீழ் குறைந்துவிட்டது எனக் உலகளாவிய காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆர்வலர் ரோஸ்மேரி கூறியுள்ளார். இப்போது முன்னெடுக்கப்படும் புதிய எண்ணெய் வயல் திட்டத்தால் 130,000 யானைகளின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் எச்சரித்து உள்ளார்.

கனடா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ரெகான்ஆப்ரிக்கா காவாங்கோ பள்ளத்தாக்கில் 34,000 சதுர கி.மீ க்கும் அதிகமான நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இது யானைகள் உள்பட பிற வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும் என சுற்றுசூழல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே எண்ணெய் கிணறு அமைக்க நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரெகான்ஆப்ரிக்கா நிறுவனம் இப்பகுதியில், 60 பில்லியன் முதல் 120 பில்லியன் வரையிலான பீப்பாய் எண்ணெய் கிடைக்கும் என்றும் பிராந்திய பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் கிடைக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு கிராம மக்களும், வன விலங்குகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நமீபிய அரசாங்கம் எந்தவொரு உற்பத்தி நடவடிக்கைக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை; ஆய்வுக்கான உரிமங்கள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு உள்ளது; ஆய்வுக் கிணறுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைக்கப்படவில்லை; இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கூறியிருக்கிறது.

ஆனால் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுகையில், இந்த திட்டம் முக்கியமான நீர் ஆதாரத்தை பாதிக்கக்கூடும். போட்ஸ்வானாவில் உள்ள காவாங்கோ டெல்டாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். உலக பாரம்பரிய தளமாக விளங்கும் பகுதிக்கு ஆபத்து நேரிடும் என தெரித்து உள்ளனர்..

எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள், சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவது இப்பகுதியில் சுற்றுசூழலுக்கும், விவசாயத்திற்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஹெல்த் ஆஃப் மதர் எர்த் அறக்கட்டளையின் இயக்குநர் நனிம்மோ பாஸ்சி கூறியிருக்கிறார்.

யானைகள் பெரும்பாலும் மனிதர்கள் நடமாட்டம், சத்தம் கேட்கும் பகுதிகளை தவிர்க்கிறது. இந்நிலையில் எண்ணெய் வயல் அமைப்பு என்பது அவைகளை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரவழைக்கும். விவசாயம் பாதிக்கப்படும். யானைகள் வழிதடம் மறிக்கப்படும் போது மனித-யானை மோதல் ஏற்படும் என்றும் நனிம்மோ பாஸ்சி எச்சரித்து உள்ளார்.

ஏற்கனவே போட்ஸ்வானாவில் பள்ளத்தாக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழந்து உள்ளன. ஆனால் அவைகள் இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை பாசித்திரள் (algal bloom) காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாசித்திரளால் நூற்றுக்கணக்கான யானைகள் இறந்து கொண்டிருக்கின்ற நிலையில், சில கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய்க்காக துளையிட விரும்புகிறார்கள் எனக் நனிம்மோ பாஸ்சி கடிந்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் பிராந்தியத்திற்கு வேலைகள் மற்றும் பெரும் பொருளாதார நன்மைகளைத் தரும் என்று ரெக்கான்ஆப்பிரிக்கா நிறுவனம் வாதிடுகிறது.

ஏற்கனவே சர்வதேச எரிசக்தி நிறுவனம், உலக வெப்பமயமாதல் பாதுகாப்பான எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றால் இவ்வாண்டே புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைத்தல் மற்றும் மேம்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

தற்போது பில்லியன் கணக்கான பீப்பாய்கள் புதைபடிவ எரிபொருட்களை எடுப்பது மற்றும் பிரித்தெடுப்பது என்பது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நனிம்மோ பாஸ்சி மேலும் பேசுகையில், எண்ணெய் பிரித்தெடுப்பது நமீபிய மக்களுக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தாது; காலநிலை மாற்றத்தை தவிர்க்க அடுத்த பத்தாண்டுகளில் முழு உலகமும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

சுற்றுசூழல் மேலும் மேலும் மோசமடையும் இந்த சூழலில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைப்பது என்பது நமது நாடுகளுக்கும், கிரகத்திற்கும் சிக்கலை தேடுவதாகும் எனவும் எச்சரித்து உள்ளார்.

ஏற்கனவே நைஜீரியாவில் நைஜர் டெல்டாவில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்ட போது, எண்ணெய் கழிவுகள் ஆற்றில் பாய்ந்தது. இதனால் விவசாயம், மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. டெல்டாவில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் வாழ்வாதரத்திற்கு முக்கியமான உணவுப்பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படும் எனக் கூறும் மக்கள், புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிரான தங்களுடைய போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.