கொரோனாவின் அடுத்தடுத்த அலையை கட்டுப்படுத்த ‘தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துங்கள்’ உலக சுகாதார அமைப்பு!

Read Time:1 Minute, 49 Second

இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவின் அடுத்தடுத்த அலையை தடுப்பதற்கு தடுப்பூசி போடுகிற வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பை கொண்டு கழுவுதல், முககவசம் அணிந்திருத்தல் ஆகிய கட்டுப்பாடுகளை உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவுகிற பகுதிகளில் நீண்ட காலங்களுக்கு தொடர்ந்து கடுமையாக செயல்படுத்த வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுதலை உலகநாடுகள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை சுறுசுறுப்பான விதத்தில் செயல்படுத்த வேண்டும், இவை மருந்து சாரா நடவடிக்கைகள் ஆகும்.

கொரோனா நம்மைச்சுற்றி இருக்கிறது…

உலகளவில் சமீபத்திய கொரோனா 2-வது அலை எழுச்சிக்கு பொருளாதாரத்தையும், சமூகத்தை திறந்ததே காரணங்களாகி உள்ளன.

கொரோனா வைரஸ் இன்னும் நம்மைச் சுற்றி இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் எந்த நிலையிலும், கொரோனாவை ஒழித்துக்கட்டி விட்டோம் என்று மனநிறைவு அடைந்துவிடக்கூடாது என்பதுக்கு இரண்டாவது அலையே சாட்சி என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.