சீன தடுப்பூசியை செலுத்திய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Read Time:5 Minute, 31 Second

உலகில் சீன தடுப்பூசியை செலுத்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக உயர்ந்தே இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மக்களை காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன… “தடுப்பூசிகள்”வைரசை அடையாளம் கண்டு அழிக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் காணப்பட்ட சீனாவில் தான் அதிகமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீனா கண்டுபிடித்த தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு சீனாவின் Sinopharm, Sinovac (சினோபார்ம், சினோவாக்) என இரு தடுப்பூசிகளை அவசரக்காலத்தில் பயன்படுத்த அனுமதியை வழங்கியிருக்கிறது. இதற்கிடையே வைரஸ் உருமாறி தாக்கும் நிலையும் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட 350-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது மட்டுமில்லாமல், உடல் நிலையும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலைக்கு மோசமாக சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழல் சீன தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சினோவாக் தடுப்பூசி 51 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சினோபார்ம் தடுப்பூசி 78.1 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோவாக் தடுப்பூசி செயல்திறன் போதுமானதாக இல்லை என கோஸ்டாரிக்கா அதனை நிராகரித்து உள்ளது. சீன தடுப்பூசியை மக்களுக்கு செலுத்திய மங்கோலியா, சீஷெல்ஸ் மற்றும் பக்ரைன் நாடுகளும் கொரோனா தொற்றின் எழுச்சியை எதிர்த்துப் போராடுகின்றன. சீன தடுப்பூசிகள் வைரஸ் பரவுவதை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்பதற்கு பல நாடுகள் உதராணமாக உள்ளன என தி நியூயார்க் டைம்ஸ் (NYT)தெரிவித்துள்ளது.

சீஷெல்ஸ், சிலி, பஹ்ரைன் மற்றும் மங்கோலியாவில் சுமார் 50 முதல் 68 சதவீதம் மக்களுக்கு சீன தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த சதவீதம் அமெரிக்காவை விடவும் அதிகமாக உள்ளது என்று தரவு கண்காணிப்பு தளமான எவர் வேர்ல்ட் இன் டேட்டா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மிக மோசமான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்த நாடுகள் உள்ளன என தெரியவந்துள்ளது.

சீனாவும் மற்றும் சீன தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திய 90-க்கும் மேற்பட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசியை போட்டாலும் வைரஸிலிருந்து ஓரளவு பாதுகாக்கப்பட்ட நாடாகவே இருக்க முடியும் என்றும் பரிசோதனை செய்தலையும், ஊரடங்கை அமல் செய்வதையும் தொடர்ந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் இதனால் அந்நாட்டு பொருளாதாரங்கள் பின்வாங்கக்கூடும் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா அதன் தடுப்பூசிகளை இராஜதந்திர ஆயுதமாக பார்க்கிறது. தொற்றுநோயிலிருந்து வெளிவருவதற்கு உதவுவதன் வாயிலாக உலகளாவிய சக்தியாக தன்னை காட்டுக்கொள்ள முயற்சிக்கிறது. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எளிதில் சேமித்து வைக்கக்கூடிய ஒரு சீன தடுப்பூசியை வழங்குவதாக உறுதியளித்து இருந்தார்.

சீன உதவியை நம்பிய மங்கோலியா விரைவாக ஒரு தடுப்பூசி திட்டத்தை உருவாக்கியது. நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திய மங்கோலிய அரசாங்கம், நாட்டு மக்கள் தொகையில் 52 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு சீனா தடுப்பூசி போட்டது. இருப்பினும் அங்கு ஞாயிற்றுக்கிழமை 2,400 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்பைவிடவும் நான்கு மடங்காகு அதிகமாகும். இதேபோன்று சிங்கப்பூர் அரசும் சீன தடுப்பூசியின் செயல்திறன் குறித்து சந்தேகப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.