கொரோனா 3-வது அலை வீரியமானதாக இருக்குமா…? தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் என்ன…? இதோ உங்களுக்கான விளக்கம்

Read Time:7 Minute, 27 Second

இந்தியாவில் 2-வது அலையின் ஆவேச தாக்குதலுக்கு காரணமான டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது வைரச்சின் கூர்முனை புரத மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இது மனித செல்களுக்குள் ஊடுருவ உதவுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பால் டெல்டா பிளஸ் உருமாற்றம் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலைக்கு காரணமாகி விடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்தியாவில் 51 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது பாதிப்பு உள்ளானவர்களா என்றால் இல்லை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் தெரிந்துக்கொள்ள சென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா…? எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…? விளக்கம்

2-வது அலை ஓயவில்லை

இதற்கிடையே கொரோனாவின் 2-வது அலை இன்னும் ஓயவில்லை. 75 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் நீடிக்கிறது. அதேநேரம் 92 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

இதற்கிடையே டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், மக்கள் கூட்டம் சேருவதை தவிர்த்தல், பரிசோதனையை அதிகரித்தல், தேவை அதிகம் இருக்கும் மாவட்டங்களின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.

3-வது அலைக்கான வாய்ப்புக்கள் என்ன…?

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து பாகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டு இருக்கிறது.

அதன் முடிவில் முந்தைய கொரோனா தொற்றிலிருந்து பெற்ற நோயெதிர்ப்பு பாதுகாப்பை முழுமையாக இழக்கும் வரையில், உருமாறிய வைரஸ் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு பாதுகாப்பை இழத்தல், வைரசின் இனப்பெருக்கம் 4.5 சதவீதத்திற்கு மேல் இருப்பது, வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 5 பேருக்காவது தொற்று நேரிடுவது, இவையனைத்தும் 2-வது அலை முடிவதற்குள் தொடங்குவது ஆகியவை மூன்றாவது அலைக்கான வீரியத்தை அளவிடும் காரணிகளாக உள்ளன.

வீரியமாக இருக்க வாய்ப்பில்லை…

ஆனால் இதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை வீரியமாக இருக்க வாய்ப்பில்லை என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் 3-வது அலை உருவாவதற்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்றும் ஆனால் 2-வது அலையை போன்று 3-வது அலை மிக கடுமையானதாக இருக்காது என்று கருதுவதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு

தொடர்ச்சியாக முகக்கவசம் அணிதல் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது 3-வது அலையை தணிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என கொரோனாவின் அனைத்து மாறுபாடுகளுக்கும் எதிராக சிறப்பாக செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது என்று வல்லுநர்கள் கூறியிருக்கும் நிலையில், 3 வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் தேவை குறித்த ஆய்வுக்கு வலியுறுத்தல்

கோவிஷீல்டு, கோவேக்சின் உட்பட கொரோனா தடுப்பூசிகள் எல்லாமே முதன்முதலில் சீனாவிலிருந்து பரவிய ‘நாவல் கொரோனா வைரஸின் மரபணு வரிசையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்.

இதனையடுத்து கொரோனா வேறு உருவங்களை எடுத்திருப்பதால் இந்த தடுப்பூசிகளை எதிர்ப்பதற்கும் புதிய வைரஸ்கள் பழகிவிடலாம் எனக் கூறும் மருத்துவர்கள், பயனாளிக்கு கொரோனா தொற்றால் கிடைக்கும் இயற்கை தடுப்பாற்றலிலிருந்து தப்பிக்கவும் அவை வழி தேடிக்கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திவிட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், 2 தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் கூட முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதும், தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டியதும் தொடர வேண்டும் . பொதுப் போக்குவரத்து வசதிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் கொரோனாவுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டியது முக்கியம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.