சென்னை, மதுரையில் டெல்டா பிளஸ், அச்சம் அவசியமா…? எப்போது உருமாற்றம் ஏற்பட்டது…? விளக்கம்

Read Time:6 Minute, 52 Second

உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறியும் மனிதர்களை தாக்குகிறது. இவ்வாறு இந்தியாவில் உருமாறிய வைரசுக்கு டெல்டா என பெயரிடப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரசை விட அதிக வேகமாக பரவும் திறன் வாய்ந்தது என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிகமாக தாக்க இந்த வைரசே காரணம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் 90 சதவீத கொரோனா தொற்றுகளுக்கு டெல்டா வைரசே காரணம் என மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 175 மாவட்டங்களில் இந்த கவலைக்குரிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாகவும் உருமாறியிருக்கிறது என பல ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வைரச்சின் கூர்முனை புரத மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த டெல்டா பிளஸ் வைரஸ். குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலைக்கு காரணமாகி விடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதுவரையில் பாதிக்கப்பட்டோர் விபரம்….

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட 45 ஆயிரம் மாதிரிகளில் 51 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிராவில் 22 பேரும், தமிழ்நாட்டில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மத்திய பிரதேசம் 7 பேரும் , கேரளா 3 பேரும், பஞ்சாப், குஜராத்தில் தலா இருவரும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், காஷ்மீர் மற்றும் கர்நாடகா, அரியானாவில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

பாதிப்பு எப்போது ஏற்பட்டது…?

2-வது அலையின் போது தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 3 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் டெல்டா பிளஸ் பதிப்பு 9 ஆக உள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், கொரோனா 2-வது அலை உச்சம் பெற்றிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் டெல்டா பிளஸ் பாதிப்பு தெரியவந்து உள்ளது.

டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் மதுரையில் உயிரிழந்த நிலையில், மற்ற 8 பேரும் நலம் பெற்று தங்களுடைய இயல்பு வாழ்க்கையை தொடங்கிவிட்டனர். சென்னையில் பாதிக்கப்பட்ட செவிலி வீட்டு தனிமையிலே குணம் அடைந்துவிட்டார். எனவே கொரோனா குறித்து அதிக அச்சம் அடைய தேவையில்லை எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரையில் டெல்டா பிளஸ் பாதிப்பினால் உயிரிழந்தவருக்கு ஏப்ரல் 15-ம் தேதி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. 21 ஆம் தேதி அவர் பரிசோதனைக்கு சென்ற போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி உயிரிழந்து உள்ளார். ஏப்ரல் மாதம் அவருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வகை வைரஸ் பாதிப்பு இப்போது ஏற்பட்டவை இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

டெல்டா பிளஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையே வழங்கப்பட்டுள்ளது. அதில்தான் அவர்களும் குணம் அடைந்து உள்ளனர் எனவே இதுகுறித்த மிகுந்த அச்சம் தேவையற்றது என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சொல்வது என்ன…?

சென்னை, காஞ்சீபுரம், மதுரை மாவட்டங்களில் டெல்டா பிளஸ் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.

அதில், இன்சாகோக் கூட்டமைப்பு (சோதனைக்கூடங்களின் கூட்டமைப்பு) ஒரு தகவலை அளித்துள்ளது. அதன்படி டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கவலைக்குரியதாக உள்ளது. அந்த வைரசின் தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளது. நுரையீரல்களில் உள்ள செல்களில் உறுதியாக இணைந்துவிடுவதாக இருக்கிறது. எதிர்ப்பாற்றலை குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரபணு மாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில்,

  • மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும்,
  • கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,
  • பரிசோதனைகள் மேற்கொள்ளவும்,
  • தடுப்பூசி செலுத்துதலை அதிகரிக்க வேண்டும்,

என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.