விண்வெளிக்கு விமானப் பயணம்..! சிறுவயது கனவை நனவாக்கிய 71 வயது தொழில் அதிபர்..!

Read Time:7 Minute, 9 Second

உலகில் இன்பமயமான விஷயங்களில் ஒன்று, பயணம் போவது…! என்கிறார் பிரபல எழுத்தாளரும் ஓவியருமான வில்லியம் ஹாஸ்லிட்.

அது எவ்வளவு உண்மையென்பது மனிதராய் பிறந்த நாம் அனைவரும் உணர்ந்தவையே. சுற்றுலா என்றாலே நம்முடைய மனம் அவ்வளவு குதூகலத்தில் மிதக்கும். சிறு பிராயத்தில் இருந்தே வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு சென்றுவிட வேண்டும் என்ற கனவு இருக்கும்.

ஆகாயம் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும், அதிக சிந்திக்கும் குழந்தை பருவத்தில் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்துக்கொண்டு நட்சத்திரம், பவுர்ணமியின் வெண்மையை ஏதோ உள்ளார்ந்த கர்ப்பனைகளுடன் ரசிக்கும் அப்பருவத்தில் பலருக்கும் அங்கு செல்ல ஆசை ஏற்படும். ஆனால் நாளடைவில் “இது நமக்கான பயணமில்லை” என்ற ஒற்றை கூற்றோடு பலரும் ஏக்கத்துடன் கனவிலிருந்து விடைபெற்றுவிடுவார்கள்.

ஆனால் பிரிட்டனை சேர்ந்த தொழில் அதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன் அவ்வாறு இல்லை…

விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற தனது சிறு பிராய கனவை எப்போதும் உயிர்ப்புடனே வைத்திருந்தார். 1950 ஜூலை 18 ஆம் தேதி பிறந்த அவர், தன்னுடைய 16 வது வயதில் ஸ்டுடண்ட் (Student)என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார். பின்னர் விர்ஜின் என்ற பெயரில் ரெயில் இயக்கம், விமான நிறுவனம் என பல வர்த்தக நிறுவனங்களை தொடங்கினார் ரிச்சர்ட் பிரான்சன்.

இப்போது விர்ஜின் குழுமத்தில் மட்டும் சுமார் 400 நிறுவனங்கள் இயங்குகிறது. அவருடைய சொத்து மதிப்பு 2012-ல் 4.8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருடைய 400 நிறுவனங்களில் ஒன்று தான் விர்ஜின் கேலக்டிக். விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் 2004-ல் தொடங்கப்பட்டது.

அப்போது 2007 ஆம் ஆண்டே மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வோம் என அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டப்படி பயணம் அமையவில்லை.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்திற்காக விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தை தயாரித்து இருந்தது. ஒரு இரட்டை விமானத்தின் நடுவே ராக்கெட் விமானம் பொருத்தப்பட்டு இருக்கும். இரட்டை விமானம் ஓடு தளத்தில் இருந்து புறப்பட்டு மேலே சென்றதும், குறிப்பிட்ட தொலைவில் ராக்கெட் விமானம் விடுவிக்கப்படும். பின்னர் ராக்கெட் உந்து விசையால் பயணம் மேற்கொள்ளும் விமானம் விண்வெளியை சென்றடையும். அங்கு சில நிமிடங்கள் இருந்துவிட்டு, தரைக் கட்டுப்பாட்டு வாயிலாக மீண்டுமே பூமிக்கே திரும்பும்.

இதற்கு ஏற்றவாறு விமானம் நவீனப்படுத்தப்பட்டு வந்தது. 2014 ஆம் ஆண்டு பரிசோதனை மேற்கொண்ட போது நேரிட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து 2018, 2019 மற்றும் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விமானம் வெற்றிகரமாக விண்வெளியை சென்றடைந்தது.

பூமியில் கடல் மட்டத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் உயரத்தை விண்வெளியின் விளிம்பு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் வரையறுத்திருக்கிறார்கள். இதனை தாண்டி செல்லும் போது மிதக்க தொடங்குகிறோம். அங்கு சென்றுவிட்டு திரும்புவதுதான் இப்பயணமாகும்.

ஏற்கனவே சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் சோதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11/07/2021) அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில் நடைபெற்றது.

ராக்கெட் விமானத்தில் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிரிஷா உள்பட 4 சுற்றுலாப் பயணிகள் ஏறிக்கொண்டனர்.

மாலை 3.30 மணியளவில் சென்ற விமானம் தரையிலிருந்து புறப்பட்டது. இரட்டை விமானம் ஓடு தளத்தில் இருந்து செங்குத்தாக புறப்பட்டது. சரியாக 13 கிலோ மீட்டர் தொலைவில் இரட்டை விமானம் நடுவில் இருந்த ராக்கெட் விமானத்தை விடுவித்தது. இதனையடுத்து ராக்கெட் உந்துவிசையில் மேலே சென்ற விமானம் 84 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து வெற்றிகரமாக தரையிறங்கியது. விமானத்தின் வெற்றி பயணத்தை பலரும் வெகுவாக கொண்டாடினர்.

விண்வெளியில் மிதந்த அந்த தருணத்தை வீடியோவாக பதிவிட்டு, தன்னுடைய சிறு பிராய கனவு நிறைவேறியதாக ரிச்சர்ட் பிரான்சன் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

சுமார் 1 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் இந்த பயணத்தை வணிக ரீதியில் வரும் 2022 ஆம் ஆண்டு தொடர அவரது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரையில் 60 நாடுகளை சேர்ந்த 600 பேர் இப்பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

விமானத்தில் பயணித்த சிரிஷா ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசித்து வரும் அவர் விமான பொறியியல் பட்டதாரி ஆவார்.

விண்வெளி பற்றிய தகவலை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய சிரிஷா, சிறப்பு மிக்க தருணமாக கூறியிருக்கிறார். இதுவரையில் இந்தியாவில் இருந்து ரகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியமஸ் ஆகியோரே விண்வெளிக்கு பயணம் செய்து இருந்தனர். இப்போது அப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லாவும் இடம்பெற்று இருக்கிறார்.