மதுரை 58 கிராம கால்வாய் திட்டம்…. பெரும் செலவு செய்தும் பயன் இல்லை விவசாயிகள் வேதனை

Read Time:6 Minute, 22 Second

வைகை அணையில் நீர்மட்டம் 68 அடி உயர்ந்தும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் பயன் அளிக்காமல் வீணாக கிடப்பது விவசாயிகளை வேதனை தெரிவிக்கிறார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்துமே வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. பருவ மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. எனவே உசிலம்பட்டி பகுதிக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதிக்கு பாசன வசதி செய்து தரும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்தத் திட்டப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது.

இத்திட்டம் 110 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும்படி விரிவுபடுத்தப்பட்டது. பின் வந்த அரசுக்களும் இத்திட்டத்தை முடிக்க நிதி ஒதுக்கீடு செய்தன. இவ்வாறு சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கட்டப்பட்ட தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே 2-வது நீளமான தொட்டிப்பாலம் என பெயரையும் தனதாக்கியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியிலும் 2 ஆயிரத்து 284 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதியை பெறும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்த கால்வாயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கால்வாய் வலுவிழந்து இருந்ததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் திட்டப்படி குளங்களுக்கு செல்லவில்லை. அதன் பின்னர் அந்த உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து அதற்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சோதனை ஓட்டம் நடத்தினர்.

ஆனாலும் இந்த சோதனை ஓட்டத்திலும் நீர்ப்பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு நீர் வரவே இல்லை. 300 கன அடி தண்ணீர் திறந்தால் தான் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று சேரும் எனக் கூறப்பட்டது. ஆனால் சோதனை ஓட்டத்தின் போது சுமார் 100 கனஅடி நீரே திறந்து விடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் முதல் வாரத்தில் 67 அடியாக இருந்தது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்மழை எதிரொலியாக மூல வைகை ஆற்றில் இருந்தும் அணைக்கு தண்ணீர் வந்தது. அணையில் இருந்து திறக்கப்படுகிற தண்ணீரை காட்டிலும், நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 68½ அடியாக உயர்ந்தது.

58 கிராம கால்வாய் திட்டப்படி வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருக்கும் போது தான் தண்ணீரை திறந்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே நிரந்தர அரசாணை பெற்றுத் தர வேண்டும், கால்வாயில் சிமெண்டு பாலம் அமைத்து உடைப்புகள் இல்லாதவாறு கால்வாயை பலப்படுத்த வேண்டும், அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருக்கும் போதே 58 கிராம கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கைகளை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் முன்வைத்து வருகிறார்கள்.

வைகை அணையில் 68 அடிக்கு மேல் நீர்மட்டம் உள்ள நிலையிலும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்துவிட முடியது நிலை நீடிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். பெரும் செலவில் ஒரு திட்டத்தை செயல்படுத்திய பின்னர் அந்த திட்டத்தினால் எந்த பலனும் கிடைக்காமல் போவது ஏற்புடையது அல்ல என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள். கால்வாயில் உடைப்புகளை தரமாக சீரமைத்து பலப்படுத்த வேண்டும்; அணையின் நீர் மட்டம் 65 அடியாக இருக்கும் போதே 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.