கலைமான்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் அழகுக்காட்சி…!

Read Time:2 Minute, 16 Second

இந்தியாவில் அழிந்து வருகிற இனமாக கலைமான்கள் உள்ளன. எனவே கலைமான்கள், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை ஒன்றின்கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சாலையை கடந்த மான்கள்

இந்த கலை மான்களுக்கென தேசிய பூங்கா குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்ட பூங்காக்களில் இதுவும் ஒன்று. அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வரையில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் துள்ளி ஓடும் கலை மான்களை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மான்கள் எப்போதும் போல இயற்கையோடு விளையாடுகின்றன. இவ்வாறு விளையாடும் கலைமான்கள் பூங்கா பகுதியில் உள்ள சாலையை ஆயிரக்கணக்கில் கூட்டம், கூட்டமாக கடந்துள்ளது. கலை மான்கள் கால்களை தூக்கிக்கொண்டு, துள்ளி ஓடி சாலையை கடக்கும் அழகுக்காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு அற்புதமான விருந்தாக அமைந்தது.

வீடியோ வைரல்

இதை படம் எடுத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். குஜராத் செய்தித்துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. வீடியோவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள், பாவ்நகர் கலைமான்கள் தேசிய பூங்கா அருகே சாலையை கடந்தன என்ற குறுஞ்செய்தியும் இடம்பெற்று இருந்தது.

இந்த ஒருநிமிட வீடியோவை பிரதமர் மோடியும் பார்த்து உள்ளார். “அருமை” என பாராட்டியும் இருக்கிறார். வைரலாகும் இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்ததுடன் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதயத்தையும் பறக்கவிட்டுள்ளனர்.