சிகிச்சையை அடுத்து வனம் திரும்பிய ‘ரிவால்டோ’ காட்டு யானை…!

Read Time:3 Minute, 12 Second

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காட்டு யானை ஒன்று சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டு அப்பகுதியை சுற்றிவந்தது. அந்த காட்டு யானைக்கு ‘ரிவால்டோ’ என்று பெயரிட்டு அதற்க்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து அதில் ரிவால்டோ யானையை பிடித்து வனத்துறையினர் அடைத்தனர். அதனைதொடர்ந்து மருத்துவ குழுவினர் யானைக்கு மரக்கூண்டுல் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையில் யானைக்கு உடல்நலம் சரியானதும் அதனை மீண்டும் வனத்தில் விடுவது குறித்து கால்நடை மருத்துவர்கள் உள்பட பல தரப்பினர் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்தது. அப்போது அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானையை தொலைதூரத்தில் உள்ள அடர்வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் தமிழக வனத்துறை முதன்மைச்செயலாளர் சுப்ரியா சாகு உத்தரவின்பேரில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு மரக்கூண்டில் இருந்த ரிவால்டோ யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் லாரியில் ஏற்றி சிக்கல்லா அடர்ந்த வனப்பகுதியில் காலை 9.30 மணியளவில் விடுவித்தனர். சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் யானை விடுவிக்கப்பட்டது. யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு உள்ளதால், அதன் மூலம் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து விட்டு மீண்டும் வனத்தில் விடுவது இதுவே முதல் முறை என்றார்.

தற்போது யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. சிக்கல்லா அடர்ந்த வனப்பகுதியில் யானை வாழ்வதற்கான அனைத்து வளங்களும் உள்ளது. இதனால் பொதுமக்கள் வாழும் ஊருக்குள் வர வாய்ப்பில்லை. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோ காலர்மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கவுசல் கூறியிருக்கிறார். யானை விடப்பட்டதும் நீர்நிலைப் பகுதியில் மண்ணோடு விளையாட தொடங்கியது என்றும் கூறியிருக்கிறார்கள்.

யானையை பத்திரமாக காட்டுக்குள் விடுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் சுப்ரியா சாகு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.