ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு…

Read Time:3 Minute, 40 Second

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகதோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் அரியவகையான சாம்பல் நிற அணில்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.

சிறுத்தைகளின் புகலிடமாகியது

இந்த வனப்பகுதியை சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சரணாலய பகுதி என்பதால் அடிக்கடி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியின் எதிரொலியால் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அரிய வகையான சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் சிறுத்தைகளின் புகலிடமாகியது தெரியவந்துள்ளது. சிறுத்தைகள் எண்ணிக்கையில் முதுமலை, களக்காடு புலிகள் காப்பகங்களை பின்னுக்கு தள்ளியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணாலயத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, ராஜ நாகம்,, புள்ளி மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. சமீபத்தில் கணக்கெடுப்பு பணிக்காக வனத்தின் பல்வேறு பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் நடமாட்டம் அறிந்து அதனை பதிவு செய்யும் நோக்கத்தோடு நவீன கேமராக்களை வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எண்ணிக்கை அதிகரிப்பு…

கேமராக்களில் பல்வேறு வனவிலங்குகள் பதிவாகி இருந்தாலும் சிறுத்தைகள் அதிக அளவில் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் படி சிறுத்தைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் வசிக்கும் புகலிடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் விளங்கி வருவதும் தெரியவந்திருக்கிறது.

இந்த ஆண்டு நடத்திய ஆய்வுபடி முதுமலை புலிகள் காப்பகத்தில் 12:11 என்ற அளவில் சிறுத்தைகள் உள்ளன. இதுவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7:15 என்ற விகிதத்திலும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 10:18 என்ற விகிதத்திலும் சிறுத்தைகள் உள்ளன என தெரியவந்துள்ளது.

ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அணில்கள் சரணாலயத்தில் யாரும் எதிர்பாராவிதமாக அதிக அளவாக 20:43 சதவீதத்தில் சிறுத்தைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை பொறுத்தவரை வனவிலங்குகள் வாழ பாதுகாப்பான இடமாக உள்ளது எனக் கூறும் வனத்துறை அதிகாரிகள், இங்கு கேமரா மூலம் வன விலங்குகள் மட்டுமன்றி சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்டறியவும் முடிகிறது. தற்போது சிறுத்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.