இந்த பூமி எத்தனையோ போர்களை பார்த்து இருக்கிறது. அதில் 5 ஆண்டுகள் நடைபெற்ற முதலாம் உலகப்போரும், 7 ஆண்டுகள் நடைபெற்ற 2-ம் உலகப்போரும் மனிதகுலத்துக்கு பேரழிவை ஏற்படுத்திய போர்களாகும். முதலாம் உலகப்போரால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து உலக நாடுகள் மீண்டு எழுந்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த நிலையில், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரால் 2-ம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
2-ம் உலகப்போர்
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனி ஹிட்லரின் நாஜிப்படை அண்டை நாடான போலந்தை ஆக்கிரமிப்பதற்காக படையெடுத்தது. இந்த நாள் தான் 2-ம் உலகப்போர் தொடங்கிய நாளாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த போரில் ஜெர்மனி தலைமையிலான அச்சு நாடுகள் அணியும், பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் அணியும் மோதியது.
போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளை கைப்பற்றிய அச்சு நாட்டு படைகள், 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் படையெடுத்தது. இதனால் ரஷியா நேச நாட்டு அணியில் இணைந்து போரில் ஈடுபட்டது. இங்கிலாந்து தலைமையிலான நேச நாடுகளுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கிய அமெரிக்கா இந்த போரில் கலந்து கொள்ளாமல் சில ஆண்டுகள் ஒதுங்கியே இருந்தது.
அமெரிக்காவை சீண்டிய ஜப்பான்
மறுபுறம் அச்சு நாடுகள் அணியிலிருந்த ஜப்பான், ஆசியாவிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த போரிட்டது.
ஆனால் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ஜப்பான், அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர்(Pearl Harbour) கடற்படை தளத்தின் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த தளம் சின்னாபின்னமானதுடன் 10-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், 180-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நாசமாயின. மேலும் 2,403 பேர் உயிரிழந்தனர். 1,178 பேர் காயம் அடைந்தனர். ஜப்பானின் இந்த செயல் தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை எழுப்பிய கதையாகிவிட்டது. அதுவரையில் ஆயுதங்களை அனுப்பி போரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது.
ஹிட்லர் தற்கொலை
அதுவரையில் தோல்வி முகத்தில் இருந்த பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் மீண்டும் புத்துயிர் பெற்று வெற்றியை நோக்கி நகர தொடங்கின. 1945-ல் நேச நாடுகள் ஐரோப்பாவில் ஜெர்மனியை கைப்பற்றின. அதன் சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டவுடன் ஜெர்மனி வீழ்ந்தது. இத்தாலி போன்ற அச்சு நாடுகள் சரணடைய நேரிட்டது.
ஜப்பான் அடம்
ஆனால் ஆசியாவில் ஜப்பான் மட்டும் கடைசி வரையில் போரிடுவோம் என முழங்கியது. ஜப்பானின் தற்கொலை படையினரின் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். காலாவதியான விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தி மோத செய்தது ஜப்பான். இதனால் அமெரிக்க கடற்படை நிலைகுலைந்த நிலையில், இதனை எப்படி சமாளிப்பது, ஜப்பானை எவ்வாறு சரணடைய செய்து, போரினை முடிவுக்கு கொண்டுவருவது என்று அமெரிக்கா திணறியது.
ஹிரோஷிமா தாக்குதல்
ஜப்பானை வீழ்த்த பலவகையில் ஆலோசனைகள் நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரூமன் இறுதியில் அணுகுண்டை வீசுவது என்ற முடிவுக்கு வந்தார். 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி, அமெரிக்காவின் பி-59 விமானம் டினியன் விமான தளத்திலிருந்து அதிகாலையில் ஹிரோஷிமா நகரத்தை நோக்கி புறப்பட்டது.
சரியாக காலை 8 மணிக்கு உலகின் முதல் அணு குண்டை அமெரிக்கா வீசியது. ‘சிறிய பையன்’ என்று பெயரிடப்பட்ட விமானத்தில் இருந்து வீசப்பட்ட 64 கிலோ எடையுள்ள ‘யுரேனியம் 235’ அணுகுண்டு தரையில் விழுவதற்கு சுமார் 45 வினாடிகள் எடுத்துக்கொண்டது.
விழுந்த அடுத்த நொடியே பெரும் காளான் போன்ற ஒரு நெருப்புக்கோளத்தை சுமார் 5 மைல் சுற்றளவிற்கு உருவாக்கியது.. ஹிரோஷிமா நகரின் 60 சதவீத பகுதிகள் கண் மூடிதிறப்பதற்குள் தரை மட்டமாயின. நொடிப்பொழுதில் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஒரு சில மாதங்களில் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
கதிர்வீச்சின் காரணமாக பல மாதங்கள், தொடர்ந்து மக்கள் மாண்ட கோரமும் அரங்கேறியது.
நாகசாகியில் தாக்குதல்
ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும் ஜப்பான் சரண் அடைய மறுத்துவிட்டது. ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலும், உயிர் இழப்பும் ஜப்பான் நாட்டு பேரரசர் மிச்சிநோமியா ஹிரோஹிட்டோவின் கல் மனத்தை கரைத்துவிடவில்லை. அமெரிக்காவும் யோசிக்கவில்லை. கடைசி ஜப்பானியன் இருக்கும் வரை நாட்டிற்காக போராடுவான் என்று மிச்சிநோமியோ ஹிரோஹிட்டோ கூறினார்…
மறுபுறம் முதல் குண்டு வீசப்பட்ட மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டினை ஜப்பானின் மற்றொரு கடற்கரை நகரமான நாகசாகி மீது வீசியது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், ஜப்பான் பணியவும் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
மான்ஹாட்டன் திட்டம்
உலகிற்கு அணுகுண்டை அறிமுகம் செய்து, அதனுடைய அழிவையும் உலகிற்கு காட்டிய அமெரிக்கா 1930 களில் அந்நாட்டு விஞ்ஞானிகளை கொண்டு ரகசியமாக அணுகுண்டு தயாரிக்க தொடங்கியது. இதற்கு மான்ஹாட்டன் திட்டம் என்று பெயரிட்டிருந்தது. 1945-ம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி நியூ மெக்சிகோ மாநிலத்தில் அமைந்துள்ள பாலைவனத்தில் முதல் அணுகுண்டை அமெரிக்கா வெற்றிகரமாக வெடித்து சோதனை செய்தது.
1930 களில் ஜெர்மனி ரகசிகமாக ஆயுதங்களை தயாரிக்கிறது என மோப்பம் பிடித்த அமெரிக்கா, ஹிட்லரை மடக்கும் விதமாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியது. ஆனால், இதில் ஜப்பான் சிக்கி பேரழிவை சந்தித்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை பலி கொடுத்தது.
அமெரிக்கா பேரழிவு ஏற்படுத்தும் போர் ஆயுதத்தைக் கொண்ட வலிமை மிக்க நாடாக மாறியது.
இன்றைக்கு (ஆகஸ்ட் 6) 76 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்கா ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசியது. என்ன ஏது என்று புரிவதற்குள், அந்நகரம் முற்றிலுமாக அழிந்தது. இதனையடுத்து தங்கள் நாட்டினை பாதுகாக்க பிரிட்டிஷ், சோவியத் ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா என பல நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்கின.
இவ்வாறு உருவாக்கப்பட்ட நவீன குண்டுகள் ஒவ்வொன்றும் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட குண்டுகளை விட 3 ஆயிரம் மடங்கு அதிக சக்தி கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு உலக யுத்தம் ஏற்பட்டால், அதுவே கடைசி யுத்தமாக இருக்கும் என்பதற்கு ஹிரோஷிமாவே எடுத்துக்காட்டு..