வனப்பகுதியில் 9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கும் தபால் ஊழியர்..!

Read Time:3 Minute, 33 Second

இழசிக்குழி கிராமம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கிறது இழசிக்குழி பழங்குடியின மக்கள் கிராமம். கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது. பாபநாசம் அணைக்கு சென்று அங்கிருந்து படகில் எதிர்புறத்திற்கு பயணம் செய்து சுமார் 9 கிலோ மீட்டர் நடந்து சென்றால் மட்டுமே கிராமத்தை அடைய முடியும். பாபநாசம் அணையில் நீர்மட்டம் குறைய குறைய நடக்க வேண்டிய தொலைவும் அதிகரிக்கக்கூடும்….

104 வயதான மூதாட்டி

காரையாறு அணைக்கு மேலே இழசிக்குழி கிராமத்தில் வசித்துவரும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு வயது 104. சுமார் 10 குடும்பங்கள் வரையில் வசிக்கும் கிராமத்தில் சுழற்சி முறையில் வெளியூர் செல்பவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் உள்ள சின்ன மயிலாறில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

அப்போது 104 வயதான மூதாட்டி குட்டியம்மாள் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு வழங்கினார். அவரது கோரிக்கையை ஏற்று முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சிய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 5 மாதங்களாக தமிழக அரசின் உதவித்தொகையை சின்ன மயிலாறு தபால் நிலைய ஊழியர் கிறிஸ்துராஜா (வயது 55) நேரில் சென்று வழங்கி வருகிறார்.

வனப்பகுதியில் 9 கி.மீ. பயணம்

கிறிஸ்துராஜா வனத்துறையின் அனுமதி பெற்று சின்ன மயிலாறில் இருந்து இஞ்சுக்குழிக்கு செல்கிறார். படகு வாயிலாக காரையாறு அணையை படகில் கடக்கிறார். பின்னர் அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கிராமத்தை அடைகிறார்.

இதற்காக பெரும்பாலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்றே பயணத்தை மேற்கொள்கிறார். அதிகாலையிலேயே அரசின் உதவித்தொகையுடன் சின்ன மயிலாறில் இருந்து காரையாறு அணை மற்றும் வனப்பகுதி வழியாக இஞ்சுக்குழிக்கு கிறிஸ்துராஜா பயணிக்கிறார். அங்கு குட்டியம்மாளிடம் உதவித்தொகையை நேரில் வழங்கிய பின்னர் அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சின்ன மயிலாறுக்கு மாலையில் திரும்பி வருகிறார்.


விடாமுயற்சியுடன் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து, மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கிவரும் தபால் ஊழியரை பலரும் பாராட்டுகிறார்கள். அரசின் உதவி தொகையை பெறும் மூதாட்டி குட்டியம்மாள், அதனை வைத்து மலையிலிருந்து செல்பவர்களிடம் கொடுத்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்கிறார்.