அழியா புகழ்கொண்ட மாமன்னன் ‘ராஜேந்திர சோழன்’ வரலாறு..

Read Time:9 Minute, 6 Second

சோழப்பேரரசின் மிகச்சிறந்த மன்னராக விளங்கிய முதலாம் ராஜராஜன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் உலகமே வியக்கும் வண்ணம் மிக உயர்ந்த கோவிலை கட்டினார். அவருடைய மகன் ராஜேந்திர சோழனும் வரலாற்றில் அழியாத புகழ்கொண்ட மாமன்னராக திகழ்கிறார்.

தந்தை ராஜராஜனுக்கு இணையாக உலகம் போற்றும் மகனாக திகழ்ந்தவர் முதலாம் ராஜேந்திர சோழன் ஆடித் திருவாதிரைத் திருநாளில் பிறந்தவர்.

சிவசரணசேகரன், பூம்புகார்த் தலைவன், செங்கோல் வளவன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் பல பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டவர். ராஜேந்திர சோழன் மட்டுமே இந்திய அரசர்களில் கடல் கடந்து சென்று தமிழர்களின் பெருமையை உலகில் நிலைநாட்டிய மன்னர் ஆவார்.

ராஜேந்திர சோழன் 1012-ம் ஆண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

செழிப்பு மிகுந்த தஞ்சையை விடுத்து வறண்ட நிலப் பகுதியான கங்கை கொண்ட சோழபுரத்தில் தலைநகரை உருவாக்கிவர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் சோழப்பேரரசர் ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி. 1,012 முதல் 1,044 வரையிலான ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. தந்தையை போலவே அழியாத கீர்த்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன், கங்கை நதி வரையில் படை அனுப்பி வெற்றிக்கொடி நாட்டியவர். வெற்றி நகரமாக கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கி எழிலார்ந்த சிவன் கோவிலையும், சோழகங்கம் என்ற ஏரியையும் இந்நகரில் உருவாக்கினார்.

கங்கை வரையில் படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டியமையால் இப்பகுதி கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் பெற்றதாகவும், கங்கை நதி நீரை கொண்டு வந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராஜேந்திர சோழன் தனது ஆயுட்காலத்தில் சுமார் 65 ஆண்டுகளை போர்க்களத்திலேயே கழித்து உள்ளார்.

இலங்கையில் சோழர் ஆட்சியை நிலைநாட்டியது மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீன எல்லை வரை சோழப்பேரரசின் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவர். உலகின் முதல் கடற்படையை தோற்றுவித்த பெருமை ராஜேந்திர சோழனை சாரும்.

கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்ஜியம்

ராஜேந்திர சோழனின் கடல் கடந்து சென்ற கடாரப் படையெடுப்பு 1026-ம் ஆண்டு தொடங்கியது. ராஜேந்திரன் கடற்படை பல கப்பல்களையும், சிறிய படகுகளையும் கொண்ட பெரும்படையாக விளங்கியிருக்கிறது.

இவரது ஆட்சியில் ஸ்ரீவிஜயம் (சுமத்ரா), பண்ணை (பானிசுமத்ராவின் கிழக்கு பகுதி), மலையூர் (மலேயா), மாயிருடிங்கம் (மலேயாவின் நடுப்பகுதி), லங்கசோகம், மாப்பாளம் (பர்மா), மேவிளம்பகம், வளைப்பந்துரு (பாலம்பெங்பகுதி), தலைத் தக்கோலம் (தக்கோபா), மாடமாலிங்கம், இலாமுரி தேசம் (சுமத்ராவின் வடக்கு பகுதி), மாநக்காவரம் (நிக்கோபார்) ஆகிய பகுதிகளை சோழர் கடற்படை கைப்பற்றியிருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த ஒரே மன்னன் என்ற பெருமை ராஜேந்திர சோழனை மட்டுமே சாரும். உலகின் கடல் வாணிபத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ராஜேந்திர சோழன் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இப்பொழுது கோரமண்டல் என குறிக்கப்படும் வங்களா விரிகுடா சோழர்களின் ஏரி என அக்காலத்தில் வழங்கப்பட்டது. சோழமண்டல கடற்கரையே பின்னர் தவறாக கோரமண்டல கடற்கரை ஆனது என தெரிவிக்கப்படுகிறது.

கடல் தாண்டி இன்றைய மலேசியாவில் கெடா ( கடாரம் ) bujang Valley-யை வென்றதால் கடாரம் கொண்டான் என பட்டம் பெற்றார்.

இப்பெயரை அவர் மதிப்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் தமிழர்கள் முதன் முதலில் வணிகர்களாகவும், பணியாளர்களாகவும் குடியேறிய பகுதி கடாரம் என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. இத்துறைமுக நகரம் இன்றைய பினாங்கு நகருக்கு வெகு அருகில் உள்ளது.

இந்த துறைமுகமானது மலைகள் சூழ்ந்த பாதுகாப்பு பகுதியில் இருந்த மிகச் சிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது.

சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் செல்லும் கப்பல்கள் இத்துறைமுகம் வழியாகவே சென்று வந்திருகிறது. 11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் சீன வணிகர்களின் அச்சுறுத்தல்கள் மிகுவும், தமிழ் வணிகர்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இதனால் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீவிஜயத்தை ஆண்ட அரசர்களும் சீன அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்க மாமன்னன் ராஜேந்திரன் பெரும் கடற்படையை திரட்டி, இவ்வரசுகளை அடிபணியச் செய்து தமிழர்களுக்கும், தமிழ் வணிகர்களுக்கும் ஆதரவு நல்கினார். உலகத் தமிழரின் வாழ்வு சிறக்க கடற்படையை திரட்டி பார் போற்றும் மன்னராக இன்றளவும் விளங்கி வருகிறார் ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின் 265 ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்யப்பட்டுள்ளதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன.

சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சை பெரிய கோவிலை போன்று நிலைத்த புகழுடன் திகழும் வகையில் கலைநயத்துடன் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது பிரகதீஸ்வரர் கோவில். ராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோவில், அக்கால போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லில் ஆன மிகப்பெரிய சிவலிங்கம் இந்த கோவிலில் தான் உள்ளது.

இங்குள்ள துர்க்கை அம்மன் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். அந்த சிலை மிக அபூர்வ வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராஜேந்திர சோழன் போருக்கு சென்று திரும்பியவுடன், கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்த பின்னரே சிவனை வணங்குவார் என்று சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் ஆன நவக்கிரக பீடமும் இக்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.

4½ ஏக்கா் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனா்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பாா்த்து செல்கிறார்கள்.

கொண்டாட்டம்

தஞ்சையில் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அந்த கோவிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் அவரது மகனான ராஜேந்திர சோழன் ஆடி மாதம் திருவாதிரை நாளில் பிறந்ததால், ஆடி திருவாதிரை நாளான வருகிற 5 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.