மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் 28,740 கிராம அஞ்சல் பணியாளர் (GDS) காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது பலருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 2,009 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தவித எழுத்துத் தேர்வோ அல்லது நேர்காணலோ இன்றி, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தபால் துறை வேலைவாய்ப்பு: தகுதிகளும் முக்கிய தேதிகளும்
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதம் படித்திருப்பதுடன், உள்ளூர் மொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பதும் அவசியமான தகுதிகளாகும்.
தேர்வாகும் நபர்களுக்கு கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) பணிக்கு 12,000 முதல் 29,380 ரூபாய் வரையும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM/GDS) பணிக்கு 10,000 முதல் 24,470 ரூபாய் வரையும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் indiapostgdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பிப்ரவரி 14, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு ஜனவரி 31 அன்றே தொடங்கிவிட்டது. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்திக் கொள்ள பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்படும். முதல் கட்ட தரவரிசைப் பட்டியல் (Merit List) பிப்ரவரி 28 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்
ஒருபுறம் மத்திய அரசு இப்படி பிரம்மாண்ட வேலைவாய்ப்புகளை அறிவித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநில திறன் மேம்பாட்டுக் கழக (APSSDC) அதிகாரிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நர லோகேஷ், இந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்துறைகள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான தெளிவான செயல்திட்டத்தை வகுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜூபிடர் வேகன்ஸ், லாரஸ் லேப்ஸ், ஹெட்டிரோ ட்ரக்ஸ் மற்றும் எதிர்காலத்தில் வரவுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் போன்றவற்றுக்குத் தேவையான திறன் தேவைகளை அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். அதற்கேற்ப இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியது மிக முக்கியம். அந்தந்த துறைகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும் எனவும் லோகேஷ் அறிவுறுத்தியுள்ளார். தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாட்டு மையங்களை ஐடிஐ (ITI) நிறுவனங்களுடன் இணைத்து அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. தொகுதி வாரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெருமளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பு தளம் மற்றும் உகாதி ஜாப் காலண்டர்
திறன் மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு இணையதளத்தை விரைவில் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 25 துறைகளுக்கான தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் தற்போது 3,100 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உட்பட மொத்தம் 1,14,899 வேலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 16 நிறுவனங்கள் இதற்காக இணைக்கப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில், சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் 60 ஆயிரம் வேலை தேடுபவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டிஎஸ்சி (DSC) தேர்வைப் போல, எந்தவொரு சட்டச் சிக்கலும் எழாத வகையில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கான அறிவிப்பை வரவிருக்கும் ‘உகாதி வேலைவாய்ப்பு காலண்டரில்’ சேர்க்கவும் அமைச்சர் லோகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.